Hot Posts

6/recent/ticker-posts

நாள்:30.09.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான மதிய உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நாள்:30.09.2024
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான மதிய உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் இன்று (30.9.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி தூய்மையே சேவை 2024 மருத்துவ முகாம்கள் நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.5.00 இலட்சம் வரை விபத்து காப்பீட்டு திட்டம், ரூ.1.00 இலட்சம் வரை பணியிடத்து விபத்து காப்பீட்டு திட்டம், இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், அரசுப்பள்ளிகளில் காலை உணவு திட்டம், திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி, கண் கண்ணாடி உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். 

அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் தூய்மையே சேவை 2024 இயக்கம் 17.09.2024 முதல் 02.10.2024 வரை தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம் தூய்மை பணியாளர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை, புற்றுநோய், தோல் நோய், இருதய நோய் மற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், அரசு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட உள்ளது. 

தூய்மைப்பணியாளர்கள் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் தங்கள் குடும்பம் மற்றும் தங்கள் குழந்தையின் நலனை பாதுகாத்திட முடியும். தங்களது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்திட வேண்டும். நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருத்தல் கூடாது. தூய்மைப்பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் விழா காலங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூட விடுமுறையின்றி பணியாற்றி வருகின்றார்கள். அரசு சார்பில் நடத்தப்படுகின்ற மருத்துவ முகாமை காட்டாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தூய்மை பணியாளர்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள கையுறை, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். அடிப்படை ஆரோக்கியத்தை பாதுகாத்திட முன்வர வேண்டும். 

அனைவரும் மருத்துவ காப்பீடு அட்டைகளை விண்ணப்பித்து பெற்று கொள்ள வேண்டும். இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.5.00 இலட்சம் வரை மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும். மேலும், தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து கொண்டு அரசின் திட்டங்களை முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 100 சதவிகிதம் நலவாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. புதியதாக சேர்ந்துள்ள பணியாளர்களுக்கு தற்போது முகாமில் அரங்குகள் அமைக்கப்பட்டு நலவாரிய அட்டைகள் வழங்க பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தாட்கோ மூலம் தொழில் தொடங்கிட மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகிறது. அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொண்டு பொருளாதாரம் மற்றும் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

மேலும், தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமில் மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து, தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான மதிய உணவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.

இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் 
திருமதி நளினி சுரேஷ்பாபு, நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்