Hot Posts

6/recent/ticker-posts

நாள்:30.09.2024 டெங்கு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

நாள்:30.09.2024 
டெங்கு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் டெங்கு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு போன்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையான மருந்துகள் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நீர் தேங்க கூடிய இடங்களில் தூய்மைபடுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் அதிகளவில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள தேவையான பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திட வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவர்கள் தனிக்கவனம் செலுத்தி, மூன்று நாட்களுக்கு மேலாக தொடர் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனை நடைவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொசு ஒழிப்பு இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலையில் வைத்திருக்க வேண்டும். 
மழைக்காலங்களில் மழை நீரானது வீடுகளை சுற்றிலும், வீடுகளின் மேற்பகுதிகளிலும் தேங்குவதற்கு வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் வகை கொசுக்கள் நன்னீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து உற்பத்தியாகும். ஏடிஸ் கொசுக்கள் அதிக தூரம் பறக்க முடியாதவை என்ற போதிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக பாதிப்பை எற்படுத்தும் வகையிலானவை ஆகும். எனவே, முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கும் வகையில் உள்ள தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் போன்றவை இருப்பின் அவற்றில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டியின் பின்புறம் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து தூய்மைப்படுத்த வேண்டும். 
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் சேமிக்கும் சிமெண்ட் தொட்டிகள், டிரம்கள், குடங்கள் பாத்திரங்கள் ஆகியவற்றில் புகுந்து முட்டையிடா வண்ணம் முழுமையாக மூடி வைத்து பாதுகாப்பாக பயன்படுத்திட வேண்டும்.  
   அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், தொழில் நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காலிமனைகள், பயன்பாட்டில் இல்லாத வீடுகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் பருவ மழையின் போது தொற்று நோய் பரவாமல் இருக்க அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் பொதுமக்களும் தங்களது வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வண்ணமும், குடிநீர் மாசுபடாமல் இருக்கவும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.வடிவேல், மாவட்ட நல அலுவலர் மரு.க.பூங்கொடி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ரவிச்சந்திரன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்