நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் 3,918 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.53.00 கோடி கல்வி கடனுதவி வழங்க இலக்கு.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் அவர்கள் தகவல்.
நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம், சி.எம்.எஸ்.பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (26.09.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் அவர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் 234 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.14.33 கோடி கல்வி கடனுதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட
மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும் வங்கிகள் மூலம் கல்வி கடனுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்கள். ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை ஊக்குவித்திட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ.7.50 இலட்சம் வரை பிணையமின்றி கடனுதவியும், ரூ.4.00 இலட்சம் வரை வட்டியை அரசு மானியமாகவும் செலுத்துகிறது. ரூ.7.50 இலட்சத்திற்கு மேல் கடனுதவி தேவைப்படின் சொத்து பிணையம் வைத்து வழங்கப்படுகிறது. வெளிநாடு சென்று படிக்கவும் கடனுதவி வழங்கப்படுகிறது.
கல்வி கடன் பெறும் மாணவ, மாணவியர்கள் அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு, நன்கு படித்து வேலைவாய்ப்பு பெற்று தங்கள் பெற்றோருக்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும். அரசின் தீவிர முயற்சியினால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. நீங்கள் பெறும் கல்வி கடனை வேலைக்கு சென்றவுடன் குறிப்பிட்ட காலத்தில் திரும்பி செலுத்திட வேண்டும். நீங்கள் திரும்பி செலுத்தும் கடன் மற்றொரு மாணவரின் கல்விக்கு நீங்கள் செய்திடும் உதவி ஆகும். மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கடன் என்பது வங்கிகள் பொதுமக்களின் வைப்பு நிதியிலிருந்து தான் வழங்குகிறார்கள். எனவே, நீங்கள் உரிய காலத்தில் திருப்பி செலுத்தினால் தான் வங்கிகள் வைப்பு நிதியை சரிசெய்திட முடியும். நீங்கள் நாட்டிற்கு செய்யும் முதல் கடமை பெற்ற கடனை திரும்பி செலுத்துவதே ஆகும். மாணவ செல்வங்கள் ஆராய்ச்சி படிப்பு, அரசுப்போட்டி தேர்வுகள் உள்ளிட்டவற்றிக்கு தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். கல்வி ஒன்றே நம்மை வாழ்வில் உயர்நிலையை அடைய செய்யும் என்பதை நீங்கள் கருத்தில் கொண்டு நன்கு கல்வி பயில வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் 3,918 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.53.00 கோடி கல்வி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த ஜூன் 30, 2024 வரை 945 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.11.00 கோடி கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இந்தியன் வங்கி சார்பில் 80 நபர்களுக்கு ரூ.2.97 கோடி, கனரா வங்கி மூலம் 81 நபர்களுக்கு ரூ.6.88 கோடி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் 24 நபர்களுக்கு ரூ.1.07 கோடி, யூனியன் வங்கி சார்பில் 12 நபர்களுக்கு ரூ.89.31 இலட்சம், பஞ்சாப் நேசனல் வங்கி சார்பில் 6 நபர்களுக்கு ரூ.98.55 இலட்சம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் 4 நபர்களுக்கு ரூ.50.82 இலட்சம், பேங்க் ஆப் இந்தியா சார்பில் 3 நபர்களுக்கு ரூ.13.18 இலட்சம், கரூர் வைசியா வங்கி சார்பில் 4 நபர்களுக்கு ரூ.12.3 இலட்சம், யூ.சி.ஓ வங்கி சார்பில் 3 நபர்களுக்கு ரூ.19.5 இலட்சம், பேங்க் ஆப் பரோடா சார்பில் 17 நபர்களுக்கு ரூ.57.74 இலட்சம் என மொத்தம் 234 நபர்களுக்கு ரூ.14.33 கோடி கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் கல்வி கடனை முறையாக பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.க.முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்