நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்
21-வது அகில இந்திய கால்நடை கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், களங்காணியில் இன்று (25.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், 21-வது அகில இந்திய கால்நடை கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,
இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு. பால்வள மற்றும் மீன்வளத்துறையும் இணைந்து 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணியினை நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 25.10.2024 முதல் பிப்ரவரி 2025 முடிய மேற்கொள்ள இருக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இப்பணியினை 6,25,000 குடியிருப்புகளில் மேற்கொள்ள 213 கால்நடை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 49 கால்நடை மேற்பார்வையாளர்களுக்கு நேர்முக பயிற்சி மற்றும் களப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் கிராம வாரியாகவும், நகரப்புறத்தில் வார்டு வாரியாகவும் இப்பணி நடைபெறவுள்ளது. இக்கணக்கெடுப்பின் மூலம் 16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை இனம், வயது, பாலினம் போன்ற விபரங்கள் சேகரிக்கப்படும் மற்றும் கால்நடை வளர்ப்போர் விவரங்களும் சேகரிக்கப்படும். கால்நடைகளுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் தீவனம், கால்நடை நோய் தடுப்பூசி, கால்நடை மருந்துகள் உற்பத்தி போன்றவைற்றை தட்டுப்பாடின்றி தயாரிக்க இந்த கணக்கெடுப்பு அவசியம்.
வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கால்நடைகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களான பால், இறைச்சி, முட்டை போன்றவற்றை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்ய கால்நடை கணக்கெடுப்பு மிக முக்கியம்.
கால்நடைகளுக்கு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும். கால்நடைகளுக்கான கொட்டகை வசதி, காப்பீடு வசதி போன்றவற்றை திட்டமிட கால்நடை எண்ணிக்கை அவசியமாகிறது.
கால்நடை கணக்கெடுப்பு பணி ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் உதவுகிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதுடன், உள்நாட்டு உற்பத்தியில் இத்துறை 5.5 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. கால்நடை கணக்கெடுப்பு பல முக்கிய அடிப்படைத் தகவல்களை அரசுக்கு வழங்குவதுடன் கொள்கை வகுப்பது நிதி ஒதுக்கீடு கால்நடை துறை சார்ந்த திட்டங்களை வகுத்தல், துறையை நவீன மயமாக்கல், நிதி உட்கட்மைப்பு சேவைகள், மற்றும் வள ஆதாரங்களை கண்டறிதல் தனிநபருக்கான பால், முட்டை இறைச்சிக்கான தேவை அளவினை நிர்ணயித்தல், ஏற்றுமதி ஒப்பீடு செய்திட மற்றும் கால்நடை வளர்ப்போரின் வேலை மற்றும் உற்பத்தி பாதுகாப்பினை உறுதி செய்திட இந்த கால்நடை கணக்கெடுப்பு மிக அவசியமாகிறது.
எனவே. கால்நடை கணக்கெடுப்பாளர்கள் உங்கள் பகுதியில் விவரங்கள் சேகரிக்க வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி உரிய விவரங்களை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.சி.நாராயணன், உதவி இயக்குநர்கள் மரு.விஜயக்குமார், மரு.சீனிவாசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்